அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக நாமனைவரும் அணிதிரள வேண்டும்! – இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர்!

Sunday, August 28th, 2016

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராகவும், மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக நாமனைவரும் அணி திரள வேண்டிய காலம் உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார் இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ஜெயந்த கருணாரட்ண.

இலங்கை மின்சார சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் “இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் உரிமைகளை வென்றெடுக்கும் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை(27)  முற்பகல்-10.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள றிம்மர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிரந்தரமற்ற வகையில் பணியாற்றும் மின்சார சபையின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மின்சார சபை தற்போது எதிர்கொண்டுள்ள ஆபத்தான நிலைமைகளிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது.  2014 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களையும் அவர்களது பணியில் நிரந்தரமாக்குவோம் என இலங்கை மின்சார சபையின் முன்னாள் வைத்து வாக்குறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி மேற்பட்டிருக்கின்றது. ஊழியர்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே, இது தொடர்பில்  அரசாங்கத்திற்கு எச்சரிக்கையும், அழுத்தமும் விடுக்கும் வகையில் கொழும்பில் பாரியளவிலான ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இந்தப் பேரணியில் வடக்கிலுள்ள அனைத்து மின்சார நிலையங்களையும் மூடி விட்டு அனைத்து ஊழியர்களும் அணிதிரண்டு எமது பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றார்.

Related posts: