யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் – யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி அழைப்பு!
 Saturday, April 24th, 2021
        
                    Saturday, April 24th, 2021
            
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை அனைவரும் இணைந்து கட்டுப்படுத்துவோம் என தெரிவித்துள்ள யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அதற்கான ஒத்துழைக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விசேட கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், யாழ். மாவட்ட மட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல், வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான ஆராய்ந்துள்ளோம்.
முக்கியமாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மக்களை எவ்வாறு இந்த நோயிலிருந்து பாதுகாப்பது என்பது குறித்தும் ஆராய்ந்தோம்.
மேலும், பொதுச் சந்தை, வியாபார நிலையங்கள் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் பொதுமக்களின் ஒன்றுகூடல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளோம்.
இதேவேளை, தீவுப் பகுதிகளில் அல்லது கடற்கரையை அண்டிய பகுதிகளில் உள்ள மீனவக் குடும்பங்கள் சிலரின் செயற்பாடுகளின் மூலம் தென்னிலங்கை மீனவர்களின் தொடர்புகளைப் பேணுவதன் காரணமாக யாழ். குடாநாட்டில் கொரோனா தீவிரமடையக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, அதனைத் தடுப்பதற்குரிய வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்.
அத்துடன், இந்த நெருக்கடியான சூழலில் தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் என யாழ். மாவட்டத்திலுள்ள மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        