யாழ் . மாநகர முதல்வர் வவுனியாவில்!

Friday, April 9th, 2021

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

இருவரிடமும் இன்று அதிகாலை 2 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும் நினைவுகூர்ந்தும் பகிரங்கமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் அனைவரும் இனிமேல் தகுதி தராதரம் பாராது உடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களும் இவ்வாறு கைது செய்யப்படுவார்களென்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: