யாழ்.மாநகரை திங்கள்முதல் முடக்கலில் இருந்து விடுவியுங்கள் – வணிகர் சங்கம் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021

யாழ்.மாநகரில் முடக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி அரச அதிபரிடம் யாழ்.வணிகர்கழகம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இது குறித்த வணிகர்கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்  –

கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் சில பாரபட்சமான விடயங்களும் பின்பற்றப்பட்டுள்ளது குறிப்பாக – வர்த்தகர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்ட நிலையில் அதே முடக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், நகை அடகு நிலையங்கள் போன்றவை வழமை போல் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும்; நியாயமாக கருதமுடியாதுள்ளது.

அதேபோன்று கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுமார் 1440 நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அறிகின்றோம். இதில் ஆக 43 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவினரால் தெரிவிக்கப்படுகின்றது. இது விகித அடிப்படையில் 3வீதம் ஆகக் கருதப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே நகரத்தின் முக்கிய பகுதி முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் மொத்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ் சிங்களப் புத்தாண்டு வர இருக்கும் இவ் வேளையில் தாங்கள் ஏற்படுத்திய தடையானது வர்த்தகர்கள் , உள்ளுர் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் விவசாய உற்பத்திப் பொருட்களில் ஈடுபடுவோர் என பல துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை பாரிய பாதிப்புக்களையும் , பாரிய நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பூட்டப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் அங்கே தொழில் புரியும் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தையும் தொழில் இழப்புக்கான நட்ட ஈட்டையும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகன் வடக்கின் ஆளுநர் திருமதி சார்ளஸ், அமைச்சர் டக்ளஸ் தோனந்தா  மற்றும் யாழ் மாவ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: