யாழ் மாநகரின் நிதிக் குழுவிலிருந்து வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி.!

Thursday, May 17th, 2018

நிதிக்குழு நிகழ்ச்சி நிரலிலுள்ள சட்ட முறைமைக்கு முரணான விடயங்களை நீக்கவேண்டும் என்பதுடன் எமது கட்சிக்கு மாநகர சபையின் நிதிக்குழுவில் இரண்டு உறுப்பினருக்கு அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கோரியதால் யாழ் மாநகரின் நிதித்குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் யாழ் மாநகரின் சபா மண்டபத்தில் குறித்த நிதிக்குழு கூட்டம் நிதிக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தொடர் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் யாழ் மாநகரின் நடப்பு நிதிக்குழுவின் உறுப்பினரமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களிடம் எமது செய்திப்பிரிவு கருத்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது-

இன்றையதினம் நடைபெற்ற நிதிக்குழு கூட்ட நிகழ்ச்சி நிரலிலுள்ள விடயங்களில் தவறுகள் பல காணப்பட்டன. குறித்த நிகழ்ச்சி நிரலில் சட்ட முறைமைக்கு முரணான விடயங்களான 2018 சித்திரை மாத்திற்கான வருமானங்கள், செலவீனங்களை அதிகரித்தல், சபையினால் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை அங்கீகரித்தல் மற்றும் திறக்கப்பட்ட கேள்வி மனுக்களை பரிசீலித்து அவற்றை அங்கீகரித்தல் போன்ற மூன்று விடயங்களும் தவறானதென சுட்டிக்காட்டி அவற்றை அந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கவேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தேன்.

இதனால் குறித்த விடயம் தொடர்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் சபையில் எழுந்தது. இதன்பொது எமது கட்சி கடந்தகாலத்தில் குறித்த விடயம் தொடர்பில் கொண்டிருந்த அனுபவங்கள் மூலம் தவறை வெளிப்படுத்தியிருந்ததை அடுத்து குறித்த சட்டமுரணான விடயங்கள் மூன்றிலுமுள்ள தவறுகளை நிதிக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து அவை நிகழ்ச்சி நிரலிலிருந்த நீக்கப்பட்டது என்றார்.

மேலும் அதி அவசர மக்கள் சேவைகள் கருதிய விடயங்களை பொதுக்கூட்டத்தில் விவாதித்து அனுமதி பெறப்படவேண்டும் என்பதையும் தான் வலியுறுத்தியதுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு யாழ் மாநகரின் நிதிக்குழுவில் இரண்டு உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை தரவேண்டும் என்றும் தான் கோரிக்கை விடுத்திருந்தாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் யாழ் மாநகரின் நிதிக்குழு சட்டவரைமுறைக்கு மீறியவகையில் பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது என தெரிவித்த அவர் யாழ் மாநகரசபையின் ஆட்சிப் பொறுப்பை பொறுப்பேற்றவுடன் சபையின் அனைத்து பொறுப்புக்களும் சபையே பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே வரையறை என்பதால் தற்போதுள்ள சபையின் தன்னிச்சையான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மோசடிகளையும் அதிகார துஸ்பிரயோகங்களையும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியதுடன் தான் குறித்த நிதிக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

Related posts: