பல்கலை கல்விசாரா ஊழியர்களுடன் இன்று பேச்சு!

Sunday, August 7th, 2016

பல்கலைக்கழகங்களில் பணி புரியும் கல்விசாரா ஊழியர்களுடனான பேச்சுவார்த்தை இன்று (07) இடம்பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரு உள்ளிட்ட அதிகாரிகளுடன், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கத்தின்பிரதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நேற்றும் (06) இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதோடு, குறித்த கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் மொஹான்லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

அடிப்படைச் சம்பளத்துடன் ரூபா 2,500 இனை சேர்த்தல்,  காப்புறுதி முறைமை ஒன்றை அறிமுகம் செய்தல், 60 வயது வரை சேவைக்கால நீடிப்பை வழங்குதல், சம்பளத்திற்கு ஏற்றாற்போல் மேலதிக கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முன்தினம் (05) முதல் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சேவைக்கு சமூகமளிக்காதோர், வேலையை விட்டு நீங்கியதாக கணிக்கப்படுவர் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஆயினும் குறித்த அறிவித்தலை பொருட்படுத்தாத பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், போராட்டத்தைத் தொடரந்தும் நடாத்தி வருகின்றனர்.

Related posts: