யாழ்.பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனை தொடர்பில் வதந்தி பரப்பியோரைக் கண்டறியுமாறு குற்றவியல் பிரிவில் பேராசிரியர்களால் முறைப்பாடு!

Tuesday, May 12th, 2020


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் சைபர் குற்றவியல் விசாரணையுடன் இணைந்த இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் பீடாதிபதி ஆகியோர் இணைந்து இன்று வழங்கியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளோர் மற்றும் சுய, நிறுவன தனிமைப்படுத்தப்பட்டோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அங்கு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து பல்வேறு அநாமதேய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமையால் தொற்று அபாயம் உள்ளதாக உண்மைக்கு மாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் அத்தகைய வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: