பல்கலை மாணவர் மோதல்: முடிவுக்கு வந்தது வழக்கு!

Thursday, December 8th, 2016

யாழ். பல்கலையில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான வழக்கில் இரு தரப்பு மாணவர்களும் தாம் தற்போது பகைமையை மறந்து சமாதானமாக இருப்பதாக தெரிவித்து, முறைப்பாட்டை மீள கைவாங்கியதன் அடிப்படையில் வழக்கு  முடிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜீலை மாதம் 16ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது சிங்கள மாணவர்கள் வழமைக்கு மாறாக வரவேற்பு நடனத்தில் வழமையாக இடம்பெறும் தமிழ் முறையை தவிர்த்து சிங்கள முறையிலான கண்டிய நடனத்தை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து முரண்பாட்டில் ஆரம்பித்து இறுதியில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் கலவரமாக உருப்பெற்றிருந்தது.

அத்துடன் இவ் மோதல் கலவர சம்பவத்தில் சிங்கள மாணவன் ஒருவன் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த மாணவனது முறைப்பாட்டுக்கு அமைய தமிழ் மாணவர்கள் சிலருக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்று தமிழ் மாணவர்கள் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கமைய சிங்கள மாணவர்களுக்கு எதிராகவும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் குறித்த இரு வழக்கு விசாரனைகளும் ஒரே சமயத்திலாக கடந்த நான்கு மாதங்களாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்திருந்தது. அத்துடன் கடந்த 2 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது குறித்த இருதரப்பு மாணவர்களும் மன்றில் சட்டத்தரணி ஊடாக தாம் தற்போது ஒற்றுமையாக இருப்பதாகவும் எனவே இவ் வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து நீதிவான், குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த நபர் தனது முறைபபாட்டை மீளப் பெறுவதாக அதே பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து அது தொடர்பாக அப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டால் இவ் வழக்கை முடிவுக்கு கொண்டுவரலாம் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய இன்று வழக்கானது, யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது  மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது கோப்பாய் பொலிஸார் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் தாம் செய்திருந்த முறைப்பாட்டை மீள கைவாங்கியதாக மேலதிக அறிக்கையை மன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் குறித்த வழக்கானது முடிவுறுத்தப்படுவதாக நீதிவான் அறிவித்திருந்தார்.

Untitled-5 copy

Related posts: