கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிழய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – மத்திய வங்கி அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்து!

Wednesday, June 16th, 2021

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது மத்திய வங்கி பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

எனவே கடன்களை மீளப்பெறும் போது கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தவணை கட்டணங்களை செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன், வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: