யாழ்ப்பாணம் வில்லூன்றிப் புனித தீர்த்தக் கடற்கரையில் தேவாலயம் நிர்மாணம்: -அகற்றுமாறு மக்கள் கோரிக்கை!

Thursday, April 7th, 2016

உரிய அனுமதிகள் எதுவுமின்றி யாழ்ப்பாணம் வில்லூன்றிப் புனித தீர்த்தக் கடற்கரையில் சட்டவிரோதமாகக்  கட்டப்பட்ட தேவாலயம் தொடர்பில் அப் பகுதிப் பொதுமக்களும், சைவசமய அபிமானிகளும் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, மத ரீதியான நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தத்  தேவாலயத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்துக்களின் வரலாற்றுப் பெருமை மிகு வில்லூன்றிப் புனித தீர்த்தக் கடற் கரை, தீர்த்தக் கேணி, மடம் ஆகியன அமைந்திருக்கும் பகுதிக்கு அருகிலேயே இந்தத் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.   யாழ். கீரிமலை புனித தீர்த்தக் கரை போன்று தொன்மையும், வரலாற்றுச் சிறப்புடையதுமாக இந்தத் தீர்த்தக் கரை அமைந்துள்ளது. யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வருகை தருகின்ற சைவத் தமிழ் மக்கள் இறந்து போன தமது உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அஸ்தி கரைத்து காலகாலமாக வழிபாடாற்றி வருகின்றனர். இவ்வாறான சிறப்பு வாய்ந்த புனித பிரதேசத்திற்கு அண்மையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் உரிய அனுமதிகளின்றிக் குறித்த தேவாலயம் அமைக்கப்பட்டிருப்பது தமது மனங்களைப் புண்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாகப் பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். புனித தீர்த்தக் கடற்கரைக்குச் செல்லும் பாதையில் கிறிஸ்தவ மத சின்னங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடற்கரைக்கு  அஸ்தியைக் கரைக்கச் செல்லும் மக்கள் தேவாலயத்தைச் சேர்ந்த சிலரால் தடுத்து நிறுத்தும் செயற்பாடுகள் அடிக்கடி இடம்பெறுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவாதகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் சம்பந்தமாக  யாழ். மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.  இதனையடுத்துத் தேவாலயம் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பில் அப் பகுதி மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் அழைக்கப்பட்ட போது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிலர் சென்று தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கடற்கரைக்கு அண்மையில் கட்டடங்கள் அமைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரைக்குச் சில மீற்றர் தூர இடைவெளியில் குறித்த தேவாலயமும், கிறிஸ்தவ மத சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன . அது மட்டுமன்றி யாழ். மாநகர சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மத விவகார அமைச்சிடம் இந்தத் தேவாலயம் அமைக்கப்படுவது தொடர்பில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை. இந் நிலையில் கடற்கரையோரமாக அனுமதி எதுவுமின்றி  நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தத் தேவாலயத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பல நாட்களாகியும் இதுவரை குறித்த தேவாலயத்தை அங்கிருந்து அகற்ற எவ் வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

351802d1-d053-479a-8f25-a8d63e5217d2

Related posts: