யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் குறையக் கூடிய சாத்தியம்?

Saturday, August 10th, 2019

யாழ்.வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த அரசியல்வாதிகள் அதிகாரிகள்  தவறியுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30,000 வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. வாக்களர்கள் நீக்கப்பட்டால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டால் குறைவடையும் என தெரியவந்துள்ளது.

வலி.வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வுகளின் போது, மீளாய்வுக்கு உட்படுத்தபடுவதில்லை.

இந்த ஆண்டும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என்று யாழ்.மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233), காங்கேசன்துறை மத்தி (ஜே/234), காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வருத்தலைவிளான் (ஜே/241), குரும்பசிட்டி (ஜே/242), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி வடக்கு (ஜே/249), தையிட்டி மேற்கு (ஜே/250), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/252), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.

மயிலிட்டி தெற்கு (ஜே/248), பலாலி வடமேல் (ஜே/255), பலாலி மேற்கு (ஜே/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்து வந்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும்.

Related posts: