யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா: மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்!

Saturday, April 4th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலுள்ள பத்துப் பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவர்களில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து வந்த மதகுருவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. பத்து பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்த ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே குறித்த மதகுருவுடன் தொடர்பினை பேணி நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது

அத்துடன் இலங்கையில் இதுவரையில் நால்வர் பலியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றுறுதியானவர்களில் 24 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரண்டு தொற்றாளர்களுக்கு தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளியின் இரத்த மாதிரிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்த மாற்று மையம் அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரி மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்

தற்போது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிவர்களிடம் இரத்தத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று மட்டும் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: