ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு – சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு!

Sunday, April 5th, 2020

கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் இன்னமும் தலைமறைவாகி உள்ளதாக வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றுமொரு தொகுதியினரின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியாகும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts: