யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் – வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021

30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்தில் நாளை மாதம் 30 ஆம் திகதிமுதல்  வழங்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் –

வடமாகாணத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின்  முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த கடந்த யூலை மாத இறுதிமுதல் நடைபெற்று வந்தன.

அவ்வாறு தமது முதலாவது தடவைக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான  இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 30 ஆம் திகதிமுதல்  வழங்கப்பட உள்ளன.

18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்பு வழங்கப்பட்டதன் அடிப்படையிலேயே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் இத்தடுப்பூசிகள்  வழங்கப்படும். தடுப்பூசி ஏற்றப்படும் தினம் தொடர்பான விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.

தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும். பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை  உறுதிப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாhரி பணிமனையினால் வழங்கப்பட்ட  அட்டையினை  எடுத்துச் செல்லுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு முதல் தடவை வழங்கப்பட்டதைப் போன்றே அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான தடுப்பூசியானது தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இறுதி நாட்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும்.

யாழ் மாவட்டத்தில் சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி,  11 ஆம் திகதி  சனிக்கிழமைகளில்  இரண்டாவது தடவைக்கான  தடுப்பூசிகளினை  பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக  பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 04ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: