யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!

Saturday, February 13th, 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், நேற்றுமுன்தினமும் நேற்றும் திடீரென தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில், யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இப்போது அனைத்துச் செயற்பாடுகளும் இயல்பு நிலையில் உள்ளது. எனினும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அச்சுவேலி சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே நேற்று நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

அச்சுவேலிப் பகுதியில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்கள், வெளிமாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், புதிய கொத்தணி உருவாகும் சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும் என தெரிவித்திருந்த அரச அதிபர் மகேசன் அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: