யாழ்ப்பாணத்தில் பாரிய மோசடி நடவடிக்கை – மக்களை எச்சரிக்கும் பொலிஸார்!

Saturday, October 3rd, 2020

கொழும்பில் வாடகை அடிப்படையில் கார்களை கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி செயல் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் போலி ஆவணங்கள் தயாரித்து கார்களை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் காருடன் கைது செய்யப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

கார் மோசடியில் ஈடுபட்ட குறித்த நபர் யாழ்ப்பாணம், நெல்லியடி பிரதேசத்தில் கார் ஒன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

கார் கொள்வனவு செய்ய வந்தவருக்கு காரின் உரிமையாளர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட காருடன் சந்தேகநபரை கைது செய்து தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் காரின் உரிமையாளர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காரின் ஆவணங்கள் போலியானதென தெரியவந்துள்ளது.

அந்த காரை கொழும்பு பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் ஒருவர் பெற்று அதனை இன்னும் ஒருவருக்கு வழங்கிய பின்னர், அவர் போலி ஆவணங்கள் தயாரித்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான போலி விற்பனை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: