யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு  15,000 லீற்றர் மது விற்பனை  

Friday, June 23rd, 2017

போதையற்ற தேசத்தை உருவாக்குவதற்காக இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டு வருகின்ற ஒரு நிலையிலேயே தென் ஆசிய நாடுகளில் மது பயன்படுத்தம் எமது நாடு முதலாவது இடத்தைப் பெற்றிருப்பதாகவும், இந்த வகையில் எமது நாடு உலகத் தர வரிசையில் 115ஆவது இடத்தில் இருப்பதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பார்கின்றபோது எமது நாட்டைப் பொறுத்த வரையில், மது பாவனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலைமை மிகவும் மோசமாக அதிகரித்து, வேதனை தருகின்ற ஒரு போக்கினைக் கொண்டிருப்பது சுட்டிக் காட்டத்தக்கதாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் அறிவித்தல் தொடர்பாக கடந்த 22ஆந் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில், கல்வியின்பால் கொண்டிருந்த அதீத பற்று காரணமாக, பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு எதிராகத் திரண்டிருந்த எமது இளைய சமுதாயம், இந்தத் தரப்படுத்தலையும் ஒரு பிரதான காரணமாகக் கொண்டு சுமார் 30 வருட கால யுத்தத்திற்கே வித்திட்டிருந்தனர். இன்று எமது இளைய சமுதாயம், கல்வியில், விளையாட்டுத் துறைகளில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இறுதி நிலைக்குத் தள்ளப்பட்டு, மது பாவனைக்கு ஆட்பட்டு, பல்வேறு சமூக, கலாசார சீர்கேட்டு செயற்பாடுகளுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

யுத்தம், மையமாக நிலைகொண்டிருந்த வடக்கு மாகாணத்தில் அக்காலகட்டமானது யுத்தம் மற்றும் அது சார்ந்த சிந்தனைகள் குறித்தும், அதன் மூலமான பாதிப்புகளிலிருந்து தப்பித்தல், உயிர் பிழைத்தல், வாழுதல் போன்ற குறிப்பிட்ட உயிர் வாழும் நிலை சார்ந்த உணர்வுகள் குறித்தும், குறுகிய நுகர்வு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை மாத்திரம் கொண்டிருந்த ஒரு சூழலில், மது போன்ற பாவனையானது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு நிலை அங்கு காணப்பட்டிருந்தது.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் சுமார்  7 இலட்சத்து 62 ஆயிரம் லீற்றர் பியர், சுமார் 65 இலட்சத்து 98 ஆயிரம் லீற்றர் வெளிநாட்டு வன் மதுபான வகைகள், சுமார் 305 கோடியே 19 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் பனங் கள் என்பன விற்பனை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் லீற்றர் அனைத்து ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிய வருகின்றது. வடக்கில் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த படியாக வவுனியா மாவட்டத்திலேயே மது பாவனை அதிகமாக உள்ளது.

Related posts: