இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் – பொலிசாரின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, October 23rd, 2021

மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவரினால், இரண்டு இளைஞர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பில், குறித்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்தில், சம்பவ எல்லையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த இரண்டு இளைஞர்களும், சம்பவ எல்லையின் குறுக்காக உந்துருளியில் வேகமாக பயணித்துள்ளதுடன், சம்பவ எல்லையை அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட நாடாவை இழுத்துச் சென்றதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரி அவர்களைத் துரத்திச்சென்று பிடித்து, தாக்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு இனவாத விம்பத்தை ஏற்படுத்துவது தவறானதாகும்.

பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டை தாம் கண்டிப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: