யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் – உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச செயலாளர்கள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நடைபெறுவதாகவும் அவை தொடர்பாக சுகாதாரத்துறை ,மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும் குழாய்க் கிணறுகள் அமைத்தல் குறிப்பாக நகரப்பகுதியில் குழாய்க் கிணறுகள் அனுமதி பெறப்படாமல், குறிப்பாக விடுமுறை நாட்களில் வகை தொகையின்றி மேற்க்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக விரைவில் விசேட கூட்டமொன்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் மேற்க்கொள்ளப்படுமென அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறே யாழ் நகரப்பகுதியில் வாகன சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக பெருமளவான நீர் பயன்படுத்தப்படுவதுடன் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் தற்போதைய கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குதிரைகளுக்கான நீரை வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாமென சுட்டிக் காட்டிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் 7 தொட்டிகள் காணப்பட்ட போதும் 2 தொட்டிகளுக்கே நீர் நிரப்பப்படுகின்றது எனவும் இவ் வறட்சி தொடருமானால் இந் நிலமை மோசமடையலாம் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலுள்ள குதிரைகள் மற்றும் கால்நடைகளுக்கான நீர்வழங்கல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் கடற்படையினரின் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் எழுவை தீவு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் நெடுந்தீவு குடிநீர்த் தேவை தொடர்பாக தங்களால் முடிந்த உதவியை செய்வதாகவும் கடற்படையால் குறிப்பிடப்பட்டது.

இதே வேளை நெடுந்தீவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சுத்திகரிக்கப்பட வேண்டிய கேணிகளை சுத்தப்படுத்தி உதவுமாறு கடற்படையினருக்கு அரசாங்க அதிபர் வேண்டுகோள் முன்வைத்தார்.

இலங்கை இராணுவத்தால் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பாக தேவைப்படும் உதவிகள் தொடர்பாக அரசாங்க அதிபரினால் வேண்டுகோள் விடுக்கப்படும் போது தாம் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: