யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – வியாபாரிகள் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021

யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால்   செவ்விளநீரின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் நுகர்வு அதிகரித்துள்ளதால் இளநீரின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் இளநீர் ஒன்றின் விலை 100 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

பருவநிலை மாற்றம் நாட்டில் ஏற்பட்டுள்ள போதிலும்  வழமை போன்று இம் மாதத்தில்  வெப்பம் அதிகளவாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் வெப்பநிலை சராசரியாக தற்போது 32 பாகை செல்சியஸ் வரையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இயற்கைப் பானமான செவ்விளநீரின் விற்பனையும் அதிகரித்துள்ளது. உடல் சூட்டினை குறைக்கவல்லதும். சிறந்த ஆரோக்கியத்தினை தருகிறதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டதுமான செவ்விளநீர்  இம்முறை கொரோனா காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதிகளின் உள்ளூரில் அறுவடையூடாக கிடைக்கும் தொகையும் குறிவாகவே காணப்படுகின்றது.

இருப்பினும் கொரோனா தொற்றின் முடக்கநிலைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் பலாலி வீதி, காங்கேசன்டதுறை வீதி ,கண்டிவீதி ஆகிய பகுதிகளில் 90  தொடக்கம் நூறு ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இடம்பெறாமையாலும். உள்ளுர் இளநீர்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்துடன் புத்தளம், சிலாபம் குருனாகல் ஆகிய பிரதேசங்களிலிருந்து  தற்போது மிகக் குறைவாகன அளவிலேயே யாழ்ப்பாணத்திகு இளநீர்கள் வருவதாகவும். வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் யாழ் மாவட்டத்தில் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுகின்ற நிலையில் வியாபாரத்திற்காக இளநீரை கொள்வனவு செய்ய பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

000

Related posts: