யாழ்ப்பாணத்திலும் தனிமைப்படுத்தல் நிலையம்!

Saturday, March 21st, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்காக பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, பலாலி, இரணைமடு, கேப்பாவிலவு போன்ற பகுதியில் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

அத்துடன், விமானப்படை முகாம்களிலேயே இந்த நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522வது படை முகாமில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகளை முன்னெடுக்க ஐந்து மில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: