யாழில் கல்வித் தகுதி குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஓய்வுபெற்ற அதிபர் சுட்டிக்காட்டு!

Saturday, June 10th, 2023

இலங்கையில் பரீட்சை முறையில் குறைபாடு காணப்பட்டாலும் தற்சமயம் அதனைத்  திருத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றுடன் இலங்கையில் தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆய்வுகள், சிபாரிசுகள் உலகத்தோடு ஒன்றி கட்டமைக்கப்பட்ட காத்திரமானவை என நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் கலாநிதி சேதுராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை செல்லுதல் என்பது கற்றல் என்ற நிலை மாறி தற்போது பாடசாலை செல்லுதல் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதேவேளை கல்வி முறை தோல்வியடையும் பட்சத்திலே தான் மாணவர்கள் போதைப்பொருட் பாவனைக்குள் தள்ளப்படும் நிலை உருவாகின்றது.

வடபகுதியில் புதிதாக பாடம் சாராத்திறன் என்ற செயற்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இதன்படி 60 சதவீத புள்ளிகள் பாடம்சார்ந்தும் ஏனையவை பாடம் சாராதும் புள்ளியிடும் முறைமை எதிர்வருங்காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கல்வி நிலையங்கள் இலாப நோக்கை அடிப்டையாகக் கொண்டாலும் சமூக நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் கல்வித் தரம் குறைந்த விளையாட்டு வீரர்களும் ,விளையாட்டு இல்லாத கல்வித் தரம் குறைந்த மாணவர்களும் காணப்படுகின்றனர். இவர்களில் கல்வித் தரம் குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

தற்போது பிரச்சினைகள் அதிகரித்தபோதும் தலைமைத்துவத் தன்மை மிகவும் குறைந்துள்ளது. இதேவேளை அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டுமாயின் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும். இது எமது பிரதேசங்களில் கேள்விக்குள்ளான நிலையிலுள்ளது.

வடக்கைப் பொறுத்தவரை மேலிருந்து ஏதாவது அழுத்தம் மேற்கொள்ளும் வண்ணமே செயற்படும்  நிலை காணப்படுகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: