மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நான்கு மாத காலஅவகாசம்!

Friday, October 7th, 2016

இதுவரை பதிவுசெய்யப்படாத இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்து கொள்வதற்காக ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் நான்கு மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதிக்குள் பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் சட்ட ரீதியான பதிவின்றி போக்குவரத்தில் ஈடுபடுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய பதிவுக் கட்டணம், வருடாந்த வருமான வரி மற்றும் காப்புறுதி கட்டணங்களும் இதுவரை செலுத்தப்படவில்லை என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதுதவிர விபத்துகள் இடம்பெற்றால், பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை அடையாளங் காணமுடியாத நிலை ஏற்படுவதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகும் சாத்தியங்களும் அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி ஆவணங்கள் இல்லாத போதிலும், அவற்றைப் பதிவுசெய்து கொள்வதற்காக கால அவகாசம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும் அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போன, சுங்கவரிக்குப் பதிலாக 65,000 முதல் 300,000 ரூபா வரையான கையிருப்பு கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்

motorbikes

Related posts: