மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளை விசாரணை – உண்மையை மறைப்பதும் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று (23) பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால்  அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: