மேலும் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பினர்!

Wednesday, September 9th, 2020

ஐந்து சிறப்பு விமானங்களில் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பியுள்ளனர் என கோவிட் -19 தடுப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் சவுதி அரேபியாவில் இருந்து 238 இலங்கையர்கள் யுஎல் 282 என்ற விமானம் ஊடாகவும்  டுபாயில் இருந்து 09 பயணிகளும் கட்டார் நாட்டிலிருந்து 28 பேரும் இந்தியாவில் இருந்து 63 பேரும் நாடுதிரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 348 பயணிகளும் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 67 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 6,167 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இதுவரையான காலப்பகுதியில் 38 ஆயிரத்து 863 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துள்ளனர்.

இதனிடையே இலங்கையில் இன்றுவரை ஏறத்தாள 2 இலட்சத்து 42 ஆயிரத்து 984 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, இலங்கையில் 17 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.அவ்வாறு கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஒன்பது பேர் கந்தக்காடு மற்றும் சேனாபுர மறுவாழ்வு மையங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ள 08 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்தது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 649 பேரில் 634 நோயாளிகள் முழுமையான குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 140 ஆக உள்ளது, அதில் 193 மருத்துவ கண்காணிப்பிலும் 2 ஆயிரத்து 935 பேர் குணமடைந்துள்ளதுடன் 12 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: