மேலும் 2,700 சமுர்த்தி முகாமையாளர்களை உள்வாங்க திட்டம்! – அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!

Monday, August 8th, 2016

வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தில் 2,700 சமுர்த்தி முகாமையாளர்களை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –  ‘நலன் உதவிகள் வழங்குவதால் மட்டும் வறுமையைக் குறைக்க முடியாது. வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் நிரந்தர வருமானத்தைப் பெறும் வகையில் மூலதன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதற்காகவே சமுர்த்தி உதவியில் சிறு தொகை சேமிப்பாக மாற்றப்படுகின்றது.

மேலும் வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தை வினைத்திறனுடையதாக மாற்று வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வாழ்வின் எழுச்சித் திணைக்களம் மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.

கடந்த காலத்தில் வாழ்வின் எழுச்சித் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு கடன்கள் பல்வேறு வட்டி வீதங்களில் வழங்கப்பட்டு பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைச் சீர்செய்து பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாளாந்த, வாராந்த, மாதாந்த கடன் பெறுவதற்கான நடைமுறை தற்போது எடுக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் கிராம மட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் கிராமங்கள் தோறும் வறுமை நிலைமையைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, அவை சட்டமாக்கப்படுவ தற்காக சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டு, வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்ப டவுள்ளது.

சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகளை பகலில் சமுர்த்தி வங்கியில் வைக்க வேண்டும். இரவில் வங்கியின் காவலாளியிடம் ஒப்படைக்க வேண்டும். சமுர்த்தி வங்கிகளூடாக அடகு பிடிக்கும் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளோம். அடகு பிடிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டியவர்கள் பிரதேச செயலாள ர்களாவர். அடகு பிடிக்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டவுடன் சமுர்த்தி வங்கிக்கு துப்பாக்கி கட்டாயமாகத் தேவைப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: