மேலதிக நீரை விநியோகிக்க முடியாது – மின்சார சபைக்கு அறியப்படுத்தியது மகாவலி அதிகார சபை!

Friday, February 3rd, 2023

பெரும்போகம் மற்றும் சிறுபோகத்துக்கான தேவையை கருத்திற்கொண்டு மேலதிக நீரை விநியோகிக்க முடியாதென மகாவலி அதிகார சபை, மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளது.

அந்த அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பொறியிலாளர் டி.எம்.என்.ஜே தனபால இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னுற்பத்திக்கு மேலதிக நீர் கிடைக்கப் பெற்றதன் காரணமாக கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படவில்லை. எனினும், உரிய மழைவீழ்ச்சி கிடைக்கபெறாமையால், மேலதிக நீர் சேமிக்கப்படவில்லை.

இதன்காரணமாக, பெரும்போகம் மற்றும் சிறுபோகத்துக்கு தேவையான நீர்ப்பாசனம், குடிநீர், மற்றும் விளைச்சலுக்கு அவசியமான நீரைக் கருத்திற்கொண்டு நீரை விநியோகிக்க தீர்மானித்ததாக மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதுவரையில், மகாவலி கங்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீர் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் 73 சதவீதமான நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நீர் மின்னுற்பத்திக்காக 50 சதவீமான நீரையே பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எரிபொருள் இன்மையால் நேற்று முதல் நிறுத்தப்படவிருந்த களனிதிஸ்ஸ மின்நிலையத்திற்கு 1.3 மில்லியன் லீற்றர் நெப்தா எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. கனியவளக் கூட்டுத்தாபனத்தினால் இந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: