முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் இல்லை – கல்விச் சமூகம்!

Friday, July 27th, 2018

வடக்குமாகாண முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு போசாக்கு உணவ வழங்குவதற்கு எந்தவொரு பொதுவான ஏற்பாடுகளும் இல்லை என்று கல்விச் சமூகம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 513 முன்பள்ளிகள் காணப்படுகின்றன. இந்த முன்பள்ளிகள் சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றின் கீழ் இயங்குகின்றன.

குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமான கல்வி செயற்பாடுகள் நடைபெறுகின்றது. இது பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவம் என்பதால் அவர்களுக்கு போசாக்கான உணவு அவசியம்.

பெரும்பாலும் முன்பள்ளிகளை இயக்கும் நிர்வாகத்தினர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெற்றோர் வீதம் போசாக்கு உணவுகளை தயார் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சில முன்பள்ளிகளில் போசாக்கு உணவு வழங்கல் தொடர்பில் எந்த ஏற்பாடும் இல்லை அல்லது உணவு வழங்கல் தொடர்பான சீரற்ற தன்மை காணப்படுகின்றது. இதனால் குழந்தைகள் வளரும் பருவத்தில் போசாக்கு நிலையை முழுமைப்படுத்த முடியாத நிலையில் நோய் வாய்ப்படுகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்குக்கூட தரம் 9 வரையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்கப்படுகின்ற நிலையில் இந்த முன்பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பொதுவான நிலைப்பாடு எதுவும் கல்வி மட்டத்தில் இல்லை.

இது தொடர்பில் மாகாணக்கல்வி அமைச்சின் பிரிவை தெரிவிக்கையில் – ஆரம்பத்தில் அனைத்து முன்பள்ளிக் குழந்தைகளுக்கும் பால் வழங்கும் திட்டம் ஒன்றை அமைச்சு மேற்கொண்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

சிறுவர் பெண்கள் அபிவிருத்தி அமைச்சு ஊடாகப் பிரதேச செயலகத்தின் ஒரு பிள்ளைக்கு நாள் ஒன்றுக்கு 30 ரூபா வீதம் போசாக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுவும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மட்டும் உள்ளது. ஆனால் போசாக்கு உணவு வழங்கப்படாத முன்பள்ளிகளும் உள்ளன.

மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கு உணவு வழங்குவது தொடர்பில் பொதுவான நடைமுறையோ அல்லது நிதி மூலமோ இல்லை என்றனர்.

Related posts: