முதலீடுகளுக்கு துரிதமாக அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

Tuesday, February 21st, 2023

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பதிலாக பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து ஒரே நிறுவனத்தினால் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இன்று இந்த இடத்திற்கு வந்தபோது எனக்கு இன்னுமொரு பறவைகள் பூங்கா நினைவுக்கு வந்தது.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இவ்வாறான பறவைகள் பூங்காவொன்று   அமைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பறவைகள் தீவில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடாளுமன்றத்தை நிறுவியுள்ளார்.

இப்போது அன்றிருந்த பறவைகள் அங்கு  இல்லாத போதும்  வெவ்வேறு வகையான பறவைகள் உள்ளன. காகங்களும் உள்ளன.

இந்த பறவைகள்  பூங்காவை நிர்மாணிப்பதில் சுமார் 20 வருடகாலங்கள் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்ததாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ  கோட்டேகொட இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை இன்று நாட்டுக்கு  சமர்ப்பித்துள்ளார்.

சிங்கப்பூரின் ஜூரோன் பறவைகள் பூங்காவை மாதிரியாகக் கொண்டு  இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை உருவாக்கியதாக அவர் கூறினார். இதன் மூலம் கண்டி நகரின் சுற்றுலா மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஜூரோன் நகரம் முதலீட்டு வலயமாகத்தான் முன்னேற்றப்பட்டது. புதிய பொருளாதாரப் பயணத்துடன் இலங்கை முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர், அவர்களது வர்த்தகங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு 10 வருடங்கள்  செல்கிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும்.

புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் உற்பத்தி, ஏற்றுமதி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்  துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு முதலீட்டாளர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய 10 வருடங்கள் எடுத்துக் கொண்டால் அதன் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மை கிடைக்காது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மூன்று மாத குறுகிய காலப்பகுதியில் பெரிய கொழும்பு பொருளாதார திட்டத்தை நிறைவேற்றி  அதனை ஆரம்பித்து வைத்ததால், அதன் பொருளாதார நன்மை இலங்கைக்கு கிடைத்தது.

ஜனாதிபதி பிரேமதாசவின் 200 ஆடைக் கைத்தொழில் வேலைத்திட்டம் மூன்று வாரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது.

முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பவற்றுக்குப்  பதிலாக, பொருளாதார ஆணைக்குழுவை  நியமித்து, ஒரே  நிறுவனத்தால் முதலீடுகளுக்கு  அனுமதி  அளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, எதிர்காலத்தில் அதை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், நமது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மதிப்பை வழங்கி, இந்த பறவைகள்  பூங்காவை நாட்டிற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: