முதற்தடவையாக இருதயவால்பு மாற்று சத்திரசிகிச்சை – யாழ் போதனா மருத்துவ நிபுணர் முகுந்தன் குழு சாதனை!

Tuesday, August 7th, 2018

யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் முதற்தடவையாக இருதய வால்பு சத்திர சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

இருதய வால்பில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிருக்கு போராடியவருக்கு சத்திரசிகிச்சை மூலமாக செயற்கை வால்பு பொருத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனைத் தரப்பு தெரிவித்தது.

மருத்துவமனையில் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சி.முகுந்தனின் மற்றொரு சாதனையாகவே இந்தச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருதய வால்பில் கிருமித்தொற்று ஏற்பட்டதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் 14 நாள்கள் செயற்ரகைச் சுவாசம் மூலமாக உயிரூட்டப்பட்டுக்கொண்டிருந்த 41 வயதுடையவருக்கே இந்தச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அவருக்கு மறுவாழ்வு கிடைத்ததற்கு ஒப்பான விடயமென மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை. கூலிவேலை செய்து அவர் வாழ்கிறார். அவர் நோய்வாய்ப்பட்டு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டமை தெரிய வந்தமையினால் மருத்துவர் நிபுணர் முகுந்தனின் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கிருமித் தொற்று இருதய வால்புக்கும் தொற்றியுள்ளமையும் அது உயிராபத்தை ஏற்படுத்தும் நிலைக்குச் செல்கின்றதையும் முகுந்தன் அவதானித்துள்ளார். சத்திரசிகிச்சை மூலமாக இருதயவால்பை மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதால் அவரது குடும்பத்தினருக்கு அது குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

அவர்களது சம்மதத்துடன் உயிராபத்து மிக்க இந்தச் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள அவர் நடவடிக்கை எடுத்ததார். கொழும்புக்குச் சென்று அதற்குரிய செயற்கைவால்பை எடுத்துவந்து கடந்த ஜீன் 21 ஆம் திகதி அவருக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. எனினும் ஜீலை 21 ஆம் திகதி வரை அவர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். சுமார் 2 மாதங்களின் பின்னர் அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

யாழ் போதனா மருத்துவமனையில் இதுவரை இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புகளுக்கான சத்திர சிகிச்சை, பிறப்பிலிருந்து இருதயத்தில் ஏற்படுகின்ற அமைப்பு ரீதியான அசாதாரண மாற்றங்களுக்கு சீரமைப்பு சத்திரசிகிச்சை முதலான திறந்த இருதய சத்திரசிகிச்சைகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் முதற்தடவையாக இந்தச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு வாராந்தம் இருவருக்கு மாத்திரமே திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையில் இந்தச் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது.

அவருடன் உணர்வழியியல் சிகிச்சை நிபணர் மருத்துவர் சு.பிறேமகிருஸ்ணா மற்றும் ஏனைய துறைசார் சத்திரசிகிச்சைக் குழாமும் இணைந்து குறித்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருந்தனர். போதனா மருத்துவமனையில் 2017 ஆம் ஆண்டு டிசெம்பரில் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த ஜீலை 31 ஆம் திகதி வரை 44 பேருக்கு திறந்த இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.

இவற்றைவிட 6 பேருக்கு இருதயம், நுரையீரலுடன் தொடர்புடைய ஆபத்தான சத்திரசிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சைக்காக 750 பேர் வரையில் காத்திருக்கின்றார்கள். முகுந்தன் இந்த வகை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார். திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு 6 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை தேவைப்படும். இலங்கையின் வட பகுதியில் மட்டுமின்றி கிழக்குப் பகுதியிலும் உள்ள ஏழ்மையான இருதய நோயாளிகளின் உயிர்காப்பதற்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு விரைந்து விரிவாக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைத் தரப்பு தெரிவித்தது.

Related posts: