முடிவெட்டுவதில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு –  மாகாண கல்வி அமைச்சு !

Friday, August 3rd, 2018

பாடசாலைகளில் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதென்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலைமுடி வெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்கு சமூகமளிப்பது தடுக்கப்பட வேண்டும். பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகு அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாணவர்களின் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டும் பின்புறம் ப வடிவத்தில் முறையாக வெட்டப்பட்டும் இருத்தல் வேண்டும்.

சேட் கொலரிலிருந்து தலைமுடி 1 அங்குலத்திலும் (2.5.செ.மீ) கூடிய இடைவெளியில் இருத்தல் வேண்டும். பக்கத் தோற்றம் ப வடிவத்தில் சீராக்கப்பட்டு காதுக்குமேல் இருக்க வேண்டும். அதற்கு கீழ் நீண்டிருக்கக் கூடாது.

தலைமுடியின் நீளம் அரை அங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது. தலையில் வரிகள், வடிவங்கள் ஏற்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்படுகின்றது. பூசகர்கள் மற்றும் மத அனுஷ்டானங்களை நடத்துபவர்கள் அவர்களுக்குரிய சம்பிரதாய சிகை அலங்காரம் மேற்கொள்ள முடியுமென்ற கட்டுப்பாட்டுக்கு இணக்கம் காணப்பட்டது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் தலைமுடியை இடதுபக்கம் உச்சிபிரித்து ஒழுங்காக அழகாக சீவப்பட்டிருப்பதுடன் எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் (ஜெல், சாயம்) பூசுவதும் சென்ற் போன்ற செயற்கை வாசனைத் திரவியங்கள் பூசுவதையும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரும் இவற்றைத் தவிர்த்து முன்மாதிரியாக இருந்து மாணவர்களின் தலைமுடி வெட்டு மற்றும் சீருடைகளில் கூட்டுப் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: