முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது – பாதுகாப்பு அமைச்சு!

Tuesday, March 17th, 2020

மார்ச் மாதம் முதலாம் திகதி முதுல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துள்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

119 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் என்பதோடு இந்த உத்தரவிற்கு இணங்காதவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தப்படும் சட்டத்திற்கமைய நீதிமன்ற நடவடிக்கை எடக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டு அதை மறைக்க முற்பட்ட நபர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபர் தொடர்பான தகவல்கள் நேற்றைய தினம் (16) வழங்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை விடுத்து பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி ஜேர்மனில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த இருவரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சந்தேகத்தின் பேரில் அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தும் அதை மறைத்தமை மற்றும் அவ்வாறு மறைப்பதற்கு ஒத்துழைத்த அவரது மனைவி ஆகியோர் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காலி துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் உள் நுழைவதற்கான அவதான நிலை காணப்பட்ட போதும் அது குறித்து தான்தோன்றி தனமாக செயற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு இருக்கையில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது என சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் 95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts: