முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் – தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் என்றும் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் என்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமை தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியை நாட்டு மக்கள் ஏற்படுத்தினார்கள் என கூறினார்.

ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு பலவீனப்படுத்தும் வகையில் ஒருசிலர் செயற்பட்டதால் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தது என குற்றம் சாட்டினார்.

அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் இருப்பினும் அதற்கு முறையான தீர்வினை அவர்கள் முன்வைக்கவில்லை என சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஒரு தனி நபரை இலக்காகக் கொண்டு மட்டுமே 21 ஆவது திருத்தச் சட்டமூலம் உருவாக்கப்பட்டது என்றும் இருப்பினும் இதற்கு எதிராகவே தமது கட்சி வாக்களிக்கும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: