முகநூல் காதல்: நகைகளை இழந்த யுவதி!

Saturday, April 9th, 2016
முகநூல் மூலம் அறிமுகமாகி பெண்ணொருவரைக் காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் ஏமாற்றிய பொறியியலாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதியில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய நபர் தான் கனடாவில் வசிப்பதாகவும் தான் திருமணமாகாதவர் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் குறித்த பெண் வவுனியாவுக்கு திரும்பி வந்த பின்னர் தான் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளேன் என்றும், அந்தப் பெண்ணைத் திருமணம் புரிய விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்தப் பெண்ணும் அவருடன் தொடர்ந்தும் முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
கடந்த ஜனவரி, பெப்ரவரி மாத காலப்பகுதியில் பெண்ணுடன் தொடர்பு கொண்ட குறித்த இளைஞன், தனக்கு முல்லைத்தீவு பகுதியிலிருந்து பெருமளவு தங்கம் கிடைத்துள்ளது என்றும், அதனைக் கடையில் விற்பனை செய்வதற்குப் பற்றுச்சீட்டுக்களுடன் உள்ள நகைகள் தேவையாகவுள்ளன என்றும், எனவே அவரிடம் நகைகளை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு வருமாறும் கூறியுள்ளார்.
குறித்த பெண்ணும் அவ்வாறு வரும்போது கச்சேரிக்கு அண்மையில் அவரை இறங்குமாறு கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். இடையில் கோயிலொன்றைக் கண்டு அதனை வணங்கி விட்டுச் செல்வோம் எனக்கூறி, பெண் உள்ளே சென்றவுடன் அவரிடமிருந்த தங்க நகைகள் அடங்கிய பையுடன் அந்த இளைஞன் மாயமாகி விட்டார். சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பொலிஸார், குறித்த சந்தேக நபரை வவுனியாவில் வைத்துக் கைது செய்து நேற்று(8) யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரை இந்த மாதம் 19ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Related posts: