மீள் புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்னுற்பத்தி திட்டங்களை வகுங்கள் – துறைசார் தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, September 15th, 2020

2030 ஆம் ஆண்டளவில் மொத்த மின்சார தேவையின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையிலான நிலையான வளர்ச்சிக்கு வழியேற்படுத்தும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளை பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி குறித்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் திட்டத்திற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் கொண்ட நிறுவனங்கள், சாத்தியமான அறிக்கைகளை தயாரிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திட்டங்களுக்கான அனுமதி கோரப்பட்டு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்படாதுவிடத்து, அந்த திட்டத்திற்கான அனுமதி கிடைத்ததாகவே கருதப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திக்கு அரசினால் முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறும் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படாவிட்டால் வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தினால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்சார உற்பத்தியை முன்னெடுப்பதற்கு தயாராகிவருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் வருடாந்த மின்சார கேள்வி 6 வீதத்தால் அதிகரிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: