மீள்குடியேற்றத்தை நான் பார்த்துக் கொள்வேன் – சொல்கின்றார் அமைச்சர் சுவாமிநாதன்!

Monday, August 1st, 2016

போர் காரணமாக வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை நான் பார்த்துக் கொள்வேன். இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் அம்பாள் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு நிகழ்வில் நேற்றையதினம் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மத்திய அரசாங்கம் வடமாகாண சபையை ஓரங்கட்டி தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்று வதற்காக உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

போர் காலத்தில் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அவர்களுடைய இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுடைய மீள்குடியேற்ற விடயத்தை நான் பார்த்துக் கொள்வேன்.

எனவே இந்த விடயத்தில் சில அரசியல்வாதிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள். ஆனால் அவ்வாறான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கின்றேன். மேலும் இது தொடர்பாக யாரும் பேச விரும்பினால் பேசலாம். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டாம். அதற்கான அவசியம் இல்லை என்பதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில் மேற்படி செயலணிக்கு வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், சிங்கள மக்களுக்கு வடகிழக்கில் பாரம்பரிய நிலங்கள் எங்கே இருக்கின்றன என்பதை மேற்படி செயலணி விளக்கமளிக்க வேண்டும் என வலியுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: