மீன் அறுவடை வீழ்ச்சி!

அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடியினால் கடந்த வருடம் யாழ். மாவட்டத்தில் 329.3 மெற்றிக்தொன் அளவு மீன் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ். மாவட்டத்தில் உள்ள 14 கடற்றொழிலாளர் பரிசோதகர் பிரிவில் இருந்து 2014ஆம் ஆண்டு 31776.8 மெற்றிக்தொன் மீன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2015 கடந்தவருடம் 31447 மெற்றிக்தொன் மீன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2547.9 மெற்றிக்தொன், பெப்ரவரி மாதம் 3097.4, மார்ச் மாதம் 3089.1, ஏப்ரல் மாதம் 3180.0, மே மாதம் 2528.8 மெற்றிக்தொன்னும், ஜீன் மாதம் 2567.7, ஜீலை மாதம் 2602.6, ஓகஸ்ட் மாதம் 2544.9 மெற்றிக்தொன்னும், செப்டெம்பர் மாதம் 2546.1, ஒக்டோபர் மாதம் 2528.4, நவம்பர் மாதம் 2110.1 மெற்றிக்தொன், டிசெம்பர் மாதம் 2104.0 மெற்றிக்தொன் அளவில் மீன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
டிசெம்பர், நவம்பர் மாதப்பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறி செயற்பாட்டினால் மீன் அறுவடை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதுடன், இக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் மீன் உற்பத்தியினை அதிகரிக்கவேண்டும் எனில் புதிய துறைமுகங்களை நிர்மாணித்து பல நாட் கடற்கலங்களை அதிகரிப்பதன் மூலம் அதிகளவு மீன் அறுவடையை மேற்கொள்ள முடியும்.
இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலவாணியைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினை கட்டுப்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
Related posts:
|
|