மீதொட்டமுல்ல – சூழலில் தோல் நோய் பரவும் ஆபத்து – GMOA எச்சரிக்கை!

Thursday, April 20th, 2017

கொலன்னாவ – மீதொட்டமுல்ல பகுதியில் தோல் நோய் பரவுவதாகவும், அப்பிரதேசத்துக்கு செல்வோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) எச்சரித்துள்ளது.

தோல் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், அப்பிரதேசத்தில் நடமாடும் வைத்திய நிலையங்கள் பல ஏற்படுத்தப்பட்டு, அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அப்பகுதிக்கு தேவையான மருத்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதோடு, தொற்று நோய்கள் பரவுமாயின், அப்பிரதேசத்துக்கு செல்வதற்கு, 40 வைத்தியர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் இருக்கின்றது எனவும் குறித்த அந்த சங்கத்தின் உப-செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், அனர்த்த முகாமைத்து பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள வைத்தியர்கள் 20 பேர், சுகாதார அமைச்சின் வசம் உள்ளனர். அவசர தேவையேற்படுமாயின், அந்த வைத்தியர்களையும் தலத்துக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, வயிற்றோட்டம் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அவற்றுக்கும் முகங்கொடுப்பதற்கும் தயார் நிலையில் உள்ளதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது

Related posts: