மீண்டும் போருக்கு முகம்கொடுக்கும் சக்தி நாட்டுக்கு கிடையாது – பிரதமர்!

Saturday, July 28th, 2018

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய மாணவர்கள் எமது எதிர்காலத் தலைவர்களாவர். அவர்கள் எதிர்பார்க்கும் வளமுள்ள நாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை அரசு கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று கௌரவம் பெறும் ஒரு மாணவர் என்னிடம் ஒரு கடிதம் தந்தார். அதில் அவர் ‘எமது நாடு நாளாந்தம் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், அதே போன்று இது வளம் நிறைந்த நாடாகவும் சுட்டிக்காட்டி நாட்டை கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், மொழி பாராது சகலரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைவரும் இதயங்களால் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை அவர் மேற்கோள்காட்டியுள்ளார். அந்த மாணவரின் நிலைப்பாட்டோடு நான் நூறுவீதம் உடன்படுகின்றேன்.

நாம் ஒன்றுபட வேண்டும். இதயங்கள் ஒன்றுபடும் போது அங்கு இனம், மதம், மொழி பொருட்டாகவே இருக்கிறது. நாடு துரிதமாக முன்னேற்றமடைவதன் மூலம்தான் எமக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது.

நாடு முன்னேறுவதற்கு அமைதியும், சமாதானமும் மிக முக்கியமானதாகும். சகவாழ்வு, நல்லிணக்கம் வளர்ந்தோங்கும் போதுதான் இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.

1967ல் நான் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட வேளையில் எமது நாடு ஒருசிறந்த நாடாகக் காணப்பட்டது. முன்னேற்றமடைந்த நாடுகளில் எமது நாடு முன்னணியில் காணப்பட்டது.

அதன் காரணமாகவே நான் எனது உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு இங்கேயே உயர் கல்வியை தொடர முடிவு செய்தேன்.

அந்தக் காலப் பகுதியில் மலேசியாவில் மலே-தமிழ் இன மோதல் ஏற்பட்டது. அது குறித்து அன்று நாம் வருத்மடைந்தோம். அந்த மோதல் குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு வந்தது. எல்லோரும் ஒன்றுபட்டனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் இன்று வரையில் மலேசியாவில் இனமுறுகல்கள் ஏற்படவே இல்லை. இன்று மலேசியா பாரிய முன்னேற்றம் கண்ட நாடாக மாறியுள்ளது. சிங்கப்பூரும் அதே போன்றுதான் ஒன்றுபட்டதால் முன்னேறியுள்ளது.

இலங்கையில் எமக்கு என்ன நடந்தது? 1977 ஆண்டில் துரித முன்னேற்றத்துக்கு திட்டம் வகுத்தோம். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம். 1983ல் கலவரம் தோன்றியது.

மக்கள் மொழியால், இனத்தால், மதத்தால் பிளவுபட்டனர். நீண்டகால யுத்தமொன்றுக்கு முகம்கொடுத்தோம். பின்னர் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதும் சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு கேள்விக்குறியாகவே தொடர்ந்தது.

2015ல் மலர்ந்த நல்லாட்சி மூலம் கடந்த மூன்று வருடங்களில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.

நாம் தமிழை மட்டும், சிங்களத்தை மட்டும் படித்தால் போதாது. உலகத்தோடு இணைய, உறவாட ஆங்கிலம் மிக முக்கியமானது. அதன் பொருட்டே மும்மொழிக் கொள்கையை வகுத்துள்ளோம். எம்மிடையே மதங்கள் தடையாக இருக்கக் கூடாது எனவும் பிரதமர் கூறினார்.

Related posts:


ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம் - உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்ப...
அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் ...
மதுபான பாவனை - இலங்கையில் நாளொன்றுக்கு 40 பேர் அகால மரணம் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அத...