மீண்டும் அனலைதீவு எழுவைதீவுக்கான படகுச் சேவைகள் ஆரம்பம்!

Wednesday, January 16th, 2019

ஊர்காவற்றுறை இறங்குதுறையிலிருந்து மீண்டும் அனலைதீவு எழுவைதீவுக்கான படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் காரைநகர் கடற்படை முகாமுக்குப் பாதுகாப்பு கருதி ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் இறங்குதுறை அமைத்து கடந்த 15 வருடங்களாக படகுச் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது கண்ணகை அம்மன் கோவிலடி இறங்குதுறை திருத்த வேலைகள் நடைபெறுவதால், ஊர்காவற்றுறை இறங்குதுறைப் பாலம் மீண்டும் படகுச் சேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஊர்காவற்றுறை நகருடன் இணைந்த நிலையில் இறங்குதுறை காணப்படுவதால் படகுக்குச் செல்லும் பயணிகள் தமது உணவுத் தேவை மற்றும் பொருள்கள் கொள்வனவு செய்து கொண்டு செல்லல் போன்றவற்றுக்கு இலகுவாகக் காணப்படுவதாலும், போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்துள்ளதாலும் மீண்டும் ஊர்காவற்றுறை இறங்குதுறையை படகுச் சேவைக்கு தொடர்ந்து பயன்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனலைதீவு எழுவைதீவுப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கண்ணகை அம்மன் இறங்கு துறையில் உணவு பெற்றுக் கொள்ள வசதிகள் இல்லாததாலும், இப் பகுதிகளிலிருந்து பொருள்கள் கொள்வனவு செய்வதற்கு வாகனங்களில் பயணிப்பதால் அதிகளவு நிதிச் செலவு ஏற்படுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Related posts: