மின்சார சபைக்கு 2022 ஆம் ஆண்டில் 152 பில்லியன் ரூபா நட்டம் – கட்டணத்தை அதிகரிப்பதை விட வேறு வழியில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர அறிவிப்பு!

Friday, December 9th, 2022

மின்கட்டணத்தில் அண்மையில் திருத்தம் செய்த பின்னரும் மின்சார சபை இந்த வருடத்தில் 152 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சார சபைக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை 111 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இம்மாத இறுதிக் குள் 152 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் மீண்டும் மின் கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தா விட்டால் தொடர்ந்தும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியாத நிலையே உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை தற்போது 100 பில்லியனுக்கு அதிகமான நிவாரணத்தை பல்வேறு பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், எதிர்வரும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் இரவில் மின் துண்டிப்பை தவிர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி, எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் நீர்மின்னுற்பத்தி நிலையங்கள் என்பன ஒருபோதும் தனியாருக்கு வழங்கப்பட மாட்டாது. அது அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தும் இயங்கும்.

அதேவேளை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்து வினைத்திறான முறையில் நிறுவன மட்டத்தில் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அது தொடர்பில் மறுசீரமைப்புக் குழு விசேடமாக சுட்டிக்காட்டியுள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பிலான அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையை முழுமையாக பரிசீலனை செய்யாமல் ஒருதலைபட்சமாக எதிர்க்கட்சியினர் அது தொடர்பில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மின்சாரத்துறை மறுசீரமைப்பு குழு, சமனலவெவ, மகாவலி மின்னுற்பத்தி நிலையங்கள் லக் ஷபான, நுரைச்சோலை உட்பட காற்றாலை மற்றும் காற்றாலையினால் செயற்படுத்தப்படும் சகல மின்நிலையங்களையும் வெற்வேறு நிறுவனங்களாக மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை இலாபமடைந்துள்ளதாக தேசிய சபையின் பொருளாதார மீட்சிக்கான திட்ட உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ள விடயம் அடிப்படையற்றதாகும்.

நிதி நெருக்கடி காரணமாக எரிபொருள் ஊடான மின்னுற்பத்தி சாத்தியமற்றதாகும்.அதன் காரணமாகவே நீர்மின்னுற்பத்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்துண்டிப்புடன் மின்விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.0000

Related posts:


கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் ...
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது - எ...
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய உச்சி மாநாடு ஆரம்பம்!