மின்சார கட்டண திருத்தம் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கையை தமது ஆணைக்குழு பெற்றுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!.

Sunday, January 14th, 2024

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கையை தமது ஆணைக்குழு பெற்றுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து, சிவில் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர்  மின்கட்டணம் திருத்தம் தொடர்பான அறிக்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைத்துள்ள நிலையில்,

நீர்மின்னுற்பத்தியின் ஊடாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆனைகுழுவிடம் முன்வைத்துள்ளது. மொத்த மின்கட்டணத்தை 3.34 சதவீதத்தால் குறைக்க மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.

இதனடிப்படையில் 30 இற்கும் குறைவான மின்னலகினை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மாத கட்டணத்தை 8.3  சதவீதத்தாலும்,

120 இற்கும் குறைவான மின்னலகை பாவிக்கும் பாவனையாளர்களின் மின்கட்டணத்தை 05 சதவீதத்தால் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய மின் கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மின்கட்டண குறைப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள் நகைப்புக்குரியது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

மின்சார சபை கடந்த ஆண்டு 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ள நிலையில், மின்கட்டணத்தை பகுதியளவில் குறைப்பதற்கு பதிலாக ஒற்றை இலக்க சதவீதத்தில் குறைப்பதற்கு பரிந்துரைத்துள்ளமை இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக கருத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: