மினுவாங்கொடவில் கொரோனா கொத்தணியில் மேலும் பலருக்கு தொற்று உறுதி !

Tuesday, October 20th, 2020

மினுவாங்கொடவில் கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2222 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2215 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 457 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 297 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குருநாகல் மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி குளியாப்பிட்டி, நரமல்ல, பன்னால, கிரியுல்ல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளிலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையிலேயே அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசியமற்ற விதத்தில் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: