மாலபே SAITAM தனியார் மருத்துவக் கல்லூரியைத் தடை செய்ய வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணி!

ஏழைகளின் மருத்துவக் கல்வியைக் கேள்விக் குறியாக்கும் மாலபே SAITAM தனியார் மருத்துவக் கல்லூரியைத் தடை செய்ய வலியுறுத்தி யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெற்றது.
காலை-09.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் முன்பாக ஆரம்பமாகிய பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களுடன் இணைந்து ஏனைய பீட மாணவர்கள், கொக்குவில் தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம்,சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள, பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் அணிதிரண்டு கலந்து கொண்டனர். பேரணி பிற்பகல்-01 மணியளவில் நல்லூரிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட மருத்துவபீட மாணவர்கள் “ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியா?”,”பணக்காரர் மட்டும் வைத்தியர் ஆவதா?” போன்ற பல்வேறு பாதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் வயதெல்லையில் மாற்றமில்லை!
தனியார் துறையினருக்கான சம்பள சலுகை காலம் எதிர்வரும் மார்ச் மாதம்வரை நீடிப்பு!
10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்ப...
|
|