மாணவர்களுக்கு பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம் – கல்வி மற்றும் பரீட்சை முறையிலும் மாற்றம் செய்வது குறித்து அவதானம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 25th, 2024

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம்  தொடர்பான  அறிவை வழங்கி  பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்..

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – பாடசாலை உணவுத் திட்டம் இன்று  ஆரம்பிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன். கல்விச் செயற்பாடு பூரணமடைவதற்கு, மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கி, பரீட்சைக்குத் தயார் படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கையும் பாதுகாக்க வேண்டும். உலகில் பல நாடுகள் இந்த பாடசாலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நமது நாட்டில் போசாக்குக் குறைபாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ‘அஸ்வெசும’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்.

பாடசாலை மாணவர்களிடையே போசாக்குக் குறைபாடு அதிகரிப்பதற்கு வருமான அளவு மட்டும் காரணம் அல்ல. சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலை உணவு சாப்பிட முடிவதில்லை.

மேலும் பகலுணவையும் சாப்பிட முடிவதில்லை. எனவே எந்த அந்தஸ்த்தை  கொண்டிருந்தாலும், எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சகல மாணவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு பாடசாலையில் உணவு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது மிகவும் அவசியம்

தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி  2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும். அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் AI சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தேசிய AI மையம் சட்டப்படி நிறுவப்பட உள்ளது.இந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும்.

அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.

இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: