மாகாண சபையினருக்கு புதிய பல நடைமுறைகள் – அரசதலைவர் செயலகம் சுற்றறிக்கை!

Friday, December 21st, 2018

மாகாண சபையினருக்கு வழங்கப்பட்டு வரும் மேலதிக படிகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் புதிய நடைமுறை ஒன்று இந்த மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மாகாண சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவைத் தலைவர்களுக்கும் பல்வேறு படிகள், கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அலுவலக படி, தொலைபேசி படி, போக்குவரத்து என்பவற்றுடன் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு மாற்றங்களை உட்படுத்தி புதிய சுற்றறிக்கை ஒன்றை அரச தலைவர் செயலகம் கடந்த ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி மாகாண பிரதி முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ளது.

சில சபைகளில் ஆளுநரின் அனுமதியுடன் அவை வழங்கப்பட்டன. அலுவலகப் படியாக வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபா நிறுத்தம், தொலைபேசிப் படியாக அவைத் தலைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் படி அலுவலகம், வீடு போன்றவற்றில் பயன்படுத்தும் தொலைபேசி செலவினங்களுக்கு உரிய பில் செலுத்தப்படும்போது பில்லில் குறிப்பிடப்படும் தொகை மாத்திரம் கொடுப்பனவாக வழங்கப்படும். ஆனால் இந்த தொகை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

சபை அமர்வுகளுக்கு வருபவர்களுக்குக் கொடுப்பனவாக ஆயிரத்து 250 ரூபா வழங்கப்பட்டது. அது 250 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சபை அமர்வுகளுக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் உறுப்பினர்களுக்கு போக்குவரத்துப் படியாக 5 ஆயிரம் ரூபா வரையில் ஒரு அமர்வுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது வாகனத்தில் வந்து செல்லும் எரிபொருள் கொடுப்பனவு மட்டும் வழங்கப்பட வேண்டும் என்றுள்ளது.

இந்த நடைமுறைகள் யாவும் இந்த மாதம் தொடக்கம் மாகாண பிரதி முதன்மைச் செயலர் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இதற்கு மாகாணப்பிரதி, முதன்மைச் செயலர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தலாகச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: