மறைந்த எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள இலண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, September 17th, 2022

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை இங்கிலாந்து பயணமானார்.

அதிகாலை 3.33 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து லண்டனுக்கு செல்லவுள்ளார். ஜனாதிபதியுடன் 8 பேர் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் காலமானார்.

அவரது உடலம் தற்போது பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்த கிட்டத்தட்ட பல கிலோமீட்டர் நீளமான நீண்ட வரிசையில் மக்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் மறைவை அடுத்து தற்போது பெரிய பிரித்தானியா, வேல்ஸ் ஸ்கொட்லாந்து அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரச தலைவராக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகன் மூன்றாம் சார்லஸ் மன்னர் செயற்படுகிறார்.

இதேவேளை, மகாராணி எலிசபத்தின் இறுதி நிகழ்வில் அனைத்து உலகத் தலைவர்களையும் ஒரு நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ளது.

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என சிறிலங்காவின் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: