மராமத்து குழு அனுமதி கொடுத்தும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில் தாமதம் – சபையில் ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Tuesday, March 12th, 2019

யாழ்.மாநகரசபையின் மராமத்துக் குழுவினரது செயற்பாடுகள் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஒப்பீட்டளவில்  மிக மந்தகதியில் செயற்பட்டுவருவது உண்மைதான். ஆனால் மராமத்துக்குழு தனது கடமைகளை சரியாக செயற்படுத்திவருகின்ற போதும் அவற்றின் நடைமுறைப்படுத்தல் தாமதமாகவே இருக்கின்றது.

அதற்கான காரணம் அதிகாரிகளின் திட்டமிடப்பட்ட செயற்பாடா அல்லது ஊழியர்களின் பற்றாக்குறையா என்று தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர உறுப்பினரும் மராமத்துக்குழுவின் தலைவருமான இரா. செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது மாநகரசபைக்குட்பட்ட பகுதியின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்டபோது பல வீதிகள் சீரமைக்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் அவை செப்பனிடப்படும் பணிகள் இதுவரை நடைபெறாதிருக்கின்றது. இதற்கு காரணம் என்ன என சபையின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மராமத்துக்குழுவிடம் கொண்டுவரப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு அவை தொடர்பில் நேரடியாக சென்று ஆய்வுகள் நடைபெற்று செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்ட போதும் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படாதிருப்பதானது ஏன் என்று புரியவில்லை. நாம் எமது கடமைகளை சரியாகவே செயற்படுத்தியிருந்திருக்கின்றோம். பொறுப்பேற்ற இன்நாள்வரை 6 அறிக்கைகளை சபையின் செயலாளருக்கு அனுப்பியுள்ளோம்.ஆனால் அவற்றின் அறிக்கைகள் கூட இதுவரை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே இந்தவிடயம் அதிகாரிகளின் திட்டமிடப்பட்ட செயற்பாடா அல்லது ஊழியர்களின் பற்றாக்குறையா என்று தெரியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: