மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை அமைப்பு இல்லை – கோப் குழு அறிக்கையில் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

மரக்கறி விதைகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லை என கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் கோப் குழு கூடிய போதே இது தெரிய வந்துள்ளது.

உள்நாட்டில் மரக்கறி விதைகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் விவசாய அமைச்சு உட்பட பல தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.

“விதை மற்றும் நடவுப் பொருள் கைத்தொழில் தொடர்பான அரசக் கொள்கை” 1997 இல் தயாரிக்கப்பட்ட போதிலும், அது ஜனவரி 01, 2021 இல் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதும் விவாதிக்கப்பட்டது.

மேலும், 2003 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க விதைச் சட்டம் தொடர்பாக, நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனால், விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட தனியார் துறையில் பல நிறுவனங்கள் உள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் விதைகளின் விலையை கட்டுப்படுத்தும் முறை இந்த சட்டத்தில் இல்லை என்றும் தெரிய வந்தது.

இதன் பிரகாரம், இது மிகவும் பாரதூரமானதொரு நிலைமை என அங்கிருந்த குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் உள்நாட்டு மரக்கறி விவசாயி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இது ஒரு மாபியா எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, இந்நிலைமையைக் கட்டுப்படுத்தும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும், அதன் மூலம் உள்நாட்டு மரக்கறி விவசாயி மலிவு விலையில் மரக்கறி விதைகளை கொள்வனவு செய்யும் முறைமை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மரக்கறி விவசாயிக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி விதைகளை வழங்கும் சதவீதம் திருப்திகரமாக இல்லை என்றும் கோபா குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், விவசாயத்துறை உள்ளிட்ட அரச துறைகளுக்கு தேவையான உள்ளூர் மரக்கறி விதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்து மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆனால், குறிப்பிட்ட காலநிலையில் குறிப்பிட்ட விதைகளை உற்பத்தி செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

எனவே அத்தகைய விதைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, சில தனியார் நிறுவனங்கள் அத்தகைய விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

மேலும், உற்பத்தி செய்வதற்கு கடினமான கலப்பின விதைகள் கூட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பிட்ட விதைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சுமார் 10 வருடங்கள் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விதை உற்பத்திக்கான தடைகள், ஆட்சேர்ப்புக்கான தடைகள் பற்றிய அறிக்கை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விதைகளின் சதவீதம் மற்றும் விதை தேவைக்கேற்ப இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் சதவீதம் குறித்த 3 வருட தகவல்கள் அடங்கிய அறிக்கையை இறுதியாக வழங்குமாறு கோபா தலைவர் கபீர் ஹாசிம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: