ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020

ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு கூடியவிரைவில் தீர்வை வழங்குவதற்காக முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை நாம் ஏற்கின்றோம்.

அங்கு உரிய கொள்கைத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. முதலில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே மலையக உதவி ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் மாகாண அரச சேவைக்கு உட்பட்டவர்களாவர். மத்திய அரசுடன் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது கடந்தகாலம் தொடர்பில் கதைத்து பயன் இல்லை. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் முயற்சிப்போம். நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

கடந்த அரசாங்கம் உத்தரவிட்டிருந்தாலும் நிதி ஏற்பாடுகளை செய்துகொடுக்கவில்லை. அதற்காக நாம் இப்பிரச்சினையை விட்டுவிடமாட்டோம்.

இது முக்கியத்துமிக்க பிரச்சினை. கூடியவிரைவில் தீர்வைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: